சமையல்

குழந்தைகள் அதிகம் விரும்பும் பிரட் அல்வா.. இதை செய்யறதுக்கு 5 நிமிஷமே அதிகம்

பொதுவாகவே குழந்தைகள் இனிப்பு வகைகளை அதிகம் விரும்பி உண்பார்கள் அதிலும் அல்வா போன்ற இனிப்பு வகைகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நாம் வீட்டிலேயே அவர்களுக்கு விதவிதமான இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாம்.

அதில் அனைவரும் விரும்பும் பிரட் அல்வா எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம் இந்த ரெசிபியை செய்வதற்கு ஐந்து நிமிடமே அதிகம். சீக்கிரம் செய்யக்கூடிய அந்த ரெசிபி பற்றி இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

பிரட் – ஐந்து துண்டுகள்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – ஒரு கப்

சர்க்கரை – கால் கப்

முந்திரி, ஏலக்காய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். பின்னர் பிரட் துண்டுகளை சிறிய அளவில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் நன்றாக சூடானதும் வெட்டி வைத்த பிரட் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பொரித்து வைத்த பிரட் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அடி கனம் உள்ள பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு பொரித்து வைத்த பிரட் துண்டுகளை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிரட் துண்டுகள் நன்றாக ஊறி அல்வா பதத்திற்கு வரும்.

அந்த சமயத்தில் தேவையான அளவு நெய்யை அதன் மேல் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். பின்னர் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து ஏலக்காயுடன் அதில் சேர்த்து கிளற வேண்டும்.

இப்பொழுது சுவையான பிரட் அல்வா தயாராகிவிட்டது. இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். திடீரென்று வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து விட்டால் உடனே இந்த ரெசிபியை செய்து கொடுத்து அசத்துங்கள்.