சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் முற்றிலும் முடங்கி போய் இருந்தது.

இப்போதுதான் மக்கள் அனைவரும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது பொதுமக்கள் பலரையும் பீதி அடைய வைத்துள்ளது.

மேலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, ஜுரம் போன்று ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு மக்கள் பயந்து நடுங்குகின்றனர்.

ஏனென்றால் கொரோனாவிற்கான அறிகுறியே இந்த காய்ச்சல், சளி தான். இதனால் இது கொரோனாவின் பாதிப்பா அல்லது சாதாரண காய்ச்சல் தானா என்ற ஒரு குழப்பம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட சில விஷயங்களைப் பற்றி இன்று தெளிவாக காண்போம்.

காய்ச்சல், இருமல், சளி போன்றவை சாதாரணமாக மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதற்கென்று தனி சீசன் எதுவும் கிடையாது. இதற்காக வீட்டிலே சில கை வைத்தியங்களையும் நாம் செய்து கொள்கிறோம். ஆனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த பிரச்சனையால் சற்று அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

அதாவது அவர்களுக்கு இதன் மூலம் மூச்சு திணறலும் ஏற்படலாம். அந்த சமயங்களில் நாம் பதட்டப்படவோ, பயப்படவோ தேவையில்லை. சாதாரண காய்ச்சல், சளி ஆகியவை ஏற்பட்டால் அது கொரோனாவாக தான் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.

இருப்பினும் இந்த கொரோனா காலத்திற்கு முன்னர் இதுபோன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு வந்தால் நாம் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. சிறு விஷயம் என்றாலும் நாம் அதிகமாக பதட்டப்பட ஆரம்பித்து விட்டோம்.

அதனால் இது போன்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதாவது அறிகுறிகள் இருந்தால் வீட்டில் சில கை வைத்திய முறைகளை செய்து பார்க்கலாம். ஆனால் அப்படியும் சரியாகவில்லை என்றால் நாம் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

அங்கு மருத்துவரின் ஆலோசனைப்படி டெஸ்ட் எடுத்து நம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சாதாரண காய்ச்சல் வரும் பட்சத்தில் நாம் அதற்கான சிகிச்சையும், உணவு பழக்கங்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சத்தான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நாம் தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் இதுபோன்ற சமயங்களில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அது மட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதும் அவசியம் இதனால் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வெந்நீரில் சிறிது கல் உப்பை போட்டு வாய் கொப்பளித்தல், சூடான நீரில் மஞ்சள் தூள் கலந்து ஆவி பிடித்தல் போன்ற முறையையும் பின்பற்ற வேண்டும். இது சளி, காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதனால் கொரோனா நோய் தொற்றை நினைத்து பதட்டப்படாமல் சாதாரண காய்ச்சல், சளிக்கு தேவையான சில முறைகளை பின்பற்றுவது நல்லது.