வில்லேஜ் ஸ்டைலில் காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி?

அசைவ வகைகளில் மீன், மட்டன், சிக்கன் போன்ற பல வகைகள் இருந்தாலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் இஷ்டமான ஒரு உணவாக இருப்பது இறால் தான். இதை நாம் வறுவல், தொக்கு, மசாலா என்று பல விதங்களில் சமைக்கலாம்.

அதிலும் கிராமங்களில் இந்த இறாலை பல வெரைட்டிகளில் சமைத்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இப்போது கிராமத்து ஸ்டைலில் நல்ல காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – கால் கிலோ

தக்காளி – மூன்று

இறால் ஒரு கிலோ

இஞ்சி பூண்டு விழுது இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்

தனியா தூள் ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

மிளகு தூள் ஒரு ஸ்பூன்

பட்டை, கிராம்பு தாளிப்பதற்கு தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

நல்லெண்ணெய் தேவையான அளவு

மல்லி தழை, கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

இறாலை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை சமைப்பதற்கு முன்பு சூடான நீரில் இந்த இறாலை போட்டு சுத்தம் செய்து கொள்வது இன்னும் நல்லது.

அடுப்பில் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். பிறகு வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

இந்த சின்ன வெங்காயம் உணவுக்கு சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது. அதனால் தான் பலரும் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி சமைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கி விட வேண்டும். பிறகு நறுக்கி வைத்த தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து இறால் நன்றாக வெந்து இந்த கலவை தொக்கு பதத்திற்கு வரும். அந்த சமயத்தில் அடுப்பை சிம்மில் வைத்து மிளகுத்தூளை அதன் மீது தூவி நன்றாக கிளறிவிட்டு மூடி வைக்க வேண்டும்.

இப்பொழுது எண்ணெய் பிரிந்து வந்ததும் அதன் மீது கருவேப்பிலை மல்லித்தழை தூவி இறக்கி விட வேண்டும்.

அனைவரும் விரும்பும் சுவையான இறால் தொக்கு இப்போது தயாராகி விட்டது. இந்த தொக்கை நாம் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்.

மேலும் இந்தத் தொக்கை சப்பாத்தி, தோசை, தயிர் சாதம், ரசம் சாதம் போன்ற அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.

சட்டுனு சுவையான கார முட்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி..