அனைவரும் விரும்பும் சுவையான மாம்பழ ஹல்வா செய்வது எப்படி?

மாம்பழ சீசன் முழுவதும் மாம்பழம் மட்டுமே சாப்பிட்டால் சில நேரம் நமக்கே போர் அடித்துவிடும். அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். அதனால், குழைந்தைகளுக்கு ஏற்றவாறு இன்னும் இனிப்பாகவும் வித்தியாசமாகவும் வீட்டிலேயே மாம்பழத்தை வைத்து ஹல்வா செய்து கொடுக்கலாம். வித்தியாசமாக இருக்கிறது என்றே சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் மாம்பழ ஹல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழ கூழ்- 2 கப்

சர்க்கரை- அரை கப்

முந்திரி- 10 எண்

உலர்ந்த திராட்சை- 10 எண்

ஏலக்காய் பொடி- கால் தேக்கரண்டி

நெய்- தேவையான அளவு

செய்முறை:

நன்கு பழுத்த மாம்பழங்களை தோல் நீக்கி, அதன் தசைப்பகுதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரளவு பழுத்த மாம்பழம் என்றால், அதை அறைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
பிறகு, ஒரு அடி கனமான பாத்திரத்தில், நெய் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி நெய் ஊற்றி, அதில் மாம்பழ கூழினை சேர்க்க வேண்டும்.

பின்பு, அடி பிடிக்காமல் மூன்றிலிருந்து ஆறு நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து, கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இடையில், தேவைப்பட்டால் அவ்வப்போது நெய் சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.

Also read: இட்லி தோசை சாப்பிட்டு போரடிக்குதா.. அப்ப இந்த அடை தோசை செஞ்சு பாருங்க!

பிறகு, சர்க்கரையை சேர்க்க வேண்டும். அப்படியே கலந்துவிட்டு கொண்டே இருக்க வேண்டும். (நீங்கள் விருப்பப்பட்டால் சர்க்கரையுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் பார்த்து பாகு எடுத்தும் மாம்பழக் கூழில் சேர்த்து செய்யலாம்)

சர்க்கரை கரைந்தவுடன், பிறகு மெல்ல, ஹல்வாவை சுற்றி தனியே நெய் வரத் தொடங்கும். அப்போது சிறு துண்டுகளாக உடைத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை நெய்யில் பொரித்து எடுத்து ஹல்வாவில் சேர்க்க வேண்டும். அடுத்து, ஏலக்காய் பொடியைத் தூவி  நன்றாக கிளறி விட்டு இறக்கினால், சுவையான மாம்பழ ஹல்வா தயார்.

(இதனை அப்படியே கூட பரிமாறலாம் அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், வடிவமான ஒரு பாத்திரத்தில் நெய் தேய்த்துவிட்டு பிறகு, அதில் ஹல்வா சேர்த்து பிரிட்ஜில் வைத்து 4 அல்லது 5 மணி நேரங்கள் கழித்து எடுத்தும் பரிமாறலாம்.)

 

Comments are closed.