சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு தான் இந்த புலாவ். அதிலும் உடலுக்கு சத்தான கொண்டைக்கடலையில் இதை செய்வது இன்னும் ஆரோக்கியம் தரும். அதை எப்படி செய்வது என்று இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
24 மணி நேரம் ஊற வைத்த கருப்பு கொண்டை கடலை
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
பட்டை -1
ஏலக்காய் -1
பிரிஞ்சி இலை – 1
கிராம்பு -2
கொத்தமல்லி -சிறிதளவு
புதினா -சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -3
பச்சைமிளகாய் -4
உப்பு -தேவைக்கு
தேங்காப்பால் – 1 1/2 கப்
பாஸ்மதி ரைஸ் – 1 கப்
செய்முறை
முதலில் ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் பாதியளவு எண்ணெயும் பாதியளவு நெய்யும் சேர்த்து, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் கிராம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
அதன் கூடவே பச்சைமிளகாயை சேர்த்து விடவும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வரவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் 24 மணி நேரம் ஊறவைத்த கருப்புச்சன்னா அதாவது கருப்பு கொண்டை கடலையை சேர்த்துவிட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் அதனை ஆவி பறக்க கிண்டி விடவும்.
Also read: அதிகமாக அரிசி உணவை சாப்பிடுபவரா நீங்கள்.? கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயங்கள்
அதன் பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவிற்கு தேங்காய்ப்பால் சேர்த்து விடவும். பின்னர் ஒரு கொதி வரும் வரை நன்றாக கலந்து விடவும். ஒரு கொதி வந்த பிறகு 20 நிமிடம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளவும். அரிசியை சேர்த்த பிறகு லேசாக கிளறவும், இல்லையெனில் பாஸ்மதி அரிசி இரண்டாக உடைந்து விடும்.
அரிசி சேர்த்த பின்பு புதினா கொத்தமல்லியை மேலாக தூவி விடவும். இறுதியாக அதில் உப்பு காரம் சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். எல்லாம் சரி பார்த்த பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விடவும். பிறகு 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கிவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி 10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்கவும்.
குக்கரை திறந்தவுடன் அருமையான நறுமணம் வீசத் தொடங்கும். எப்போது சாப்பிடுவோம் என்ற ஆர்வத்தை அனைவருக்கும் உண்டுபடுத்தும் . பரிமாறுவதற்கு முன்னதாக சாதத்தின் மேலில் நெய்யை இரண்டிலிருந்து மூன்று டீஸ்பூன் ஊற்றிய பின் பரிமாறினால் நெய்யின் நறுமணத்துடன் கொண்டைக்கடலை புலாவ்யின் சுவையும் ஒன்றுபட்டு சாப்பிடுபவர்களை அடிமையாக்கிவிடும்.