உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

சில காலங்களுக்கு முன்பு அதாவது நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் கிடைத்த உணவுகள் மிகவும் சுத்தமானவை. கலப்படம் என்ற சொல்லுக்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. அவர்கள் சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இயற்கை உணவுகள் மட்டுமே.

அதனால்தான் நம் முன்னோர்கள் அனைவரும் நூறு வயது தாண்டியும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு மிக எளிதாக கிடைத்தது.

ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவு வகைகளும் தரமானது மற்றும் ஆரோக்கியமானதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. கலப்படமில்லாத உணவு வகைகளை இப்போது நம்மால் பார்க்க முடிவதில்லை.

துரித உணவுகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நம் உடலுக்குள் சென்று விஷமாக மாறுகிறது. இதனால் தான் முப்பது வயதிலேயே கேன்சர், ஹார்ட் அட்டாக், சுகர் போன்ற பல வியாதிகள் நமக்கு வந்துவிடுகிறது.

இது பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறு குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. இதற்கு நாம் அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உணவில் இருக்கும் கலப்படத்தை கண்டு கொண்டாலே போதும். நம் உடலை வியாதிகளிலிருந்து நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அப்படி எந்த உணவுகளில் கலப்படம் இருக்கிறது என்பதையும் அதை எப்படி நாம் தெரிந்து கொள்வது என்பதைப் பற்றியும் இங்கு விளக்கமாக காண்போம்.

நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் இந்த பச்சை பட்டாணிக்கு முக்கிய இடம் உண்டு. தற்போது இந்த பச்சை பட்டாணி சிறு சிறு பாக்கெட்டுகளில் போட்டு விற்கப்படுகிறது.

இந்த பட்டாணியை சிறிது நேரம் தண்ணீரில் போட்டால் அந்த நீரின் நிறமே பச்சையாக மாறி விடும். அப்படி என்றால் இதில் கலப்படம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால் பாக்கெட்டுகளில் கிடைக்கும் இந்த பட்டாணியை வாங்காமல் இயற்கையாக கிடைக்கும் பட்டாணியை வாங்கி நாம் பயன்படுத்தலாம்.

இதேபோன்று வெண்டைக்காய், பச்சைமிளகாய், கேரட் போன்ற அனைத்து பொருட்களிலும் செயற்கை சாயம் பூசப்பட்டு விற்பனையாகிறது. இதை நாம் ஈசியாக தெரிந்து கொள்ளலாம். அதாவது டிஷ்யூ பேப்பர் அல்லது வெள்ளை துணியை சிறிது நீரில் நனைத்து இந்த காய்கறிகளை நன்றாக அழுத்தித் தேய்த்தால் நமக்கு அது கலப்படமான இல்லையா என்பது தெரிந்துவிடும்.

மேலும் ஆப்பிளை வாங்கும் போது அதை நம் நகத்தால் சுரண்டி பார்த்தாலே போதும் அதில் எவ்வளவு மெழுகு இருக்கிறது என்பது தெரிந்துவிடும். அதேபோல நாம் அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் பாலில் கலப்படம் இருக்கிறது. அளவுக்கு அதிகமான நுரை வரும் பாலில் சோப்பு தூள் கலக்கப்படுகிறது.

மிளகாய்தூள், மஞ்சள்தூள், தேன், டீத்தூள், காபிதூள் போன்று நாம் அத்தியாவசியமாக பயன்படுத்தும் அனைத்து உணவுப் பொருட்களிலும் ரசாயன கலவைகள் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் ஒவ்வொரு பொருட்களை வாங்கும் போதும் இது போன்று பரிசோதித்து வாங்க வேண்டும். இதன் மூலம் நமக்கு ஏற்படும் பல பாதிப்புகளில் இருந்து நம்மால் விடுபட முடியும்.

Comments are closed.