ஆரோக்கியமான குதிரைவாலி கிச்சடி செய்வது எப்படி.. இதில் இவ்வளவு நன்மைகளா இருக்கிறது?

சிறுதானியங்களில் பல நன்மைகள் உண்டு ஆனால் நமக்கு அதன் நன்மைகளை பற்றி பெரும்பாலும் யோசிப்பதில்லை. அப்படி ஒரு சிறுதானியங்களில் ஒன்று குதிரைவாலி.

இந்த குதிரைவாலி நமது உடலில் உள்ள சர்க்கரை அளவை மிக எளிதில் குறைக்க வல்லது மற்றும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு பெரிதும் உதவ கூடியது. முக்கியமாக மலச்சிக்கல் வராமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த குதிரைவாலி கிச்சடி.

பெரும்பாலும் நமது வீடுகளில் ரவை கிச்சடி செய்துதான் பார்த்து இருப்போம். இப்போது குதிரைவாலியில் கிச்சடி எப்படி செய்வது என்று நாம் பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி –  ஒரு கப்
வெங்காயம், தக்காளி, கேரட் –  தலா ஒன்று
பச்சை மிளகாய் –  3பட்டாணி – கால் கப்
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை-  சிறிதளவு
கடுகு –  சிறிதளவு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கடலை பருப்பு – சிறிதளவு
மிளகு –  சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை:  

வெங்காயம் இஞ்சி கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். குதிரைவாலி அரிசியை வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் மிளகு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், தக்காளி போன்றவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

Also read: ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க

அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு 3 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு, பட்டாணி சேர்த்து வதக்கி வாணலியை மூடி வேக விடவும். காய்கள் நன்றாக வெந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து குதிரைவாலியை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறவும். பின்னர் வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும். நன்றாக வெந்ததும் இறக்கி தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையான குதிரைவாலி கிச்சடி ரெடி.

நாம் அன்றாடம் செய்யும் “ரவை கிச்சடியை” விட இந்த குதிரைவாலி கிச்சடியின் சுவை மிகவும் சுவையாக இருக்கும் அதனால் குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் ரவை கிச்சடியை விட இந்த குதிரைவாலி கிச்சடியில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியுள்ளது. நீங்களும் ஒரு முறை செய்து பார்த்து பயனடையுங்கள்.

Comments are closed.