என்ன குழம்பு வைக்கிறதுன்னு குழப்பமா இருக்குதா.. காரசாரமான இந்த பருப்பு பொடிய ட்ரை பண்ணுங்க

பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய குழப்பத்தை கொடுக்க கூடிய ஒரே விஷயம் என்ன குழம்பு வைப்பது என்பதுதான். சாம்பார், புளி குழம்பு என்று மாற்றி மாற்றி குறிப்பிட்ட சில குழம்பு வகைகளையே வைத்து கொடுத்தால் அது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சிறு எரிச்சலை கொடுக்கும்.

மேலும் புதுசு புதுசா ஏதாவது சமையல் வேண்டும் என்று குழந்தைகள், கணவர் எல்லோரும் அடம்பிடிப்பார்கள். இதனால் வீட்டில் இருக்கும் மனைவிக்கு இன்னும் கொஞ்சம் டென்ஷன் அதிகமாகும். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் இது போன்ற ஏதாவது ஒரு பொடி சாதம் செய்து கொடுத்தால் வித்தியாசமாக இருக்கும்.

குழந்தைகள் முதல் அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய பருப்பு பொடியை எப்படி சுவையாக செய்வது என்று இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – ஒரு கப்

கடலைப்பருப்பு – அரை கப்

பாசிப்பருப்பு – அரை கப்

உடைத்த கடலை – அரை கப்

உளுந்து – ஒரு ஸ்பூன்

பூண்டு – ஐந்து பல்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 20

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதை நன்றாக ஆற வைத்து பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நல்ல காரசாரமான பருப்பு பொடி தயாராகிவிட்டது. இந்த பொடியை காற்று போகாத டப்பாவில் அடைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இது எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாது. நிறைய காரம் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தேவையான அளவுக்கு மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

இத்துடன் உருளைக்கிழங்கு வருவல், சிப்ஸ் வகைகள், முட்டை ஆம்லெட் போன்ற எதுவாக இருந்தாலும் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

இந்த சாதத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள். அப்புறம் அடிக்கடி இதுவே வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் லெமன் டீ.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!