தலைவலி உங்களை பாடாய்ப்படுத்துகிறதா?.. இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்

மனிதர்கள் பலருக்கும் தலைவலி என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தலையிடி, மண்டையிடி என்று குறிப்பிடப்படும் இந்த தலைவலி நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் ஒருவித வலியாகும்.

இது சாதாரண காரணத்தினாலும் வருவது உண்டு அல்லது தீவிர பிரச்சினையானாலும் வரக்கூடும்.

ஆண்களை விட பெண்களுக்கே இந்த தலை வலி அதிக அளவில் பிரச்சினையை கொடுக்கிறது. அதிலும் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தான் தலைவலி அதிகமாக இருக்கும்.

மேலும் சரியான ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், நேரம் தவறி சாப்பிடுவது, மன அழுத்தம், கடுமையாக உழைப்பது போன்ற காரணங்களாலும் தலைவலி வரக்கூடும்.

இந்த தலைவலியில் பலவகைகள் இருக்கிறது.

மன உளைச்சலால் உருவாகும் தலைவலி

சைனஸ் போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் தலைவலி

விபத்துகளுக்கு பின்னால் ஏற்படும் தலைவலி

குழந்தைகளுக்கு வரும் தலைவலி

வயதானவர்களுக்கு வரும் தலைவலி

ஒற்றை தலைவலி

இதுபோன்று தலைவலியில் பலவகைகள் இருக்கிறது. நாம் எந்த தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மன உளைச்சலால் ஏற்படும் தலைவலி கழுத்தின் பின் பகுதியில் இருந்து உருவாகும்.

இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை இந்த மன உளைச்சல் ஏற்படும் போதும் இந்த வலி வரலாம். குறிப்பாக 25 முதல் 30 வயதிற்குள் இருக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் இந்த வலி ஏற்படுகிறது.

மூக்கு அடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளால் இந்த தலைவலி ஏற்படும். அப்பொழுது கண்ணுக்கு அடியில் அல்லது தலை முழுவதும் ஒருவித வலி பரவும். இதற்கு மருத்துவரை அணுகி சரியான மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

ரத்த அழுத்தம், நோய்த் தொற்றின் காரணமாகவும் தலைவலி வரலாம். கண் பார்வை குறைபாடு இருப்பவர்களுக்கும் இந்த தலை வலி அதிக அளவில் ஏற்படுகிறது.

இப்படி நம்மை பாடாய்படுத்தும் தலைவலியை வீட்டிலேயே சில முறைகளைக் கொண்டு நிவர்த்தி செய்ய முடியும். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதை ஒரு கிளாசுக்கு மாற்றி விடவும்.

ஒரு துண்டு இஞ்சியை நன்றாக அரைத்து அந்த சாரை அந்த சுடு நீரில் சேர்க்க வேண்டும். அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு பிழிந்து வெதுவெதுப்பாக பருகவும். இதன் மூலம் தலைவலி உடனே மறைந்துவிடும்.

மேலும் ஒரு துண்டு சுக்கு எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். அது மட்டுமல்லாமல் உடலில் தேவையான நீர் இல்லாத போதும் இப்படி தலைவலி ஏற்படலாம். அதனால் சிறிது சிறிதாக தண்ணீரை குடித்துவர தலைவலி குறையும்.

கிராமப்புறங்களில் தலைவலி ஏற்பட்டால் உடனே ஒரு காபியை போட்டு குடிப்பார்கள். அதிலும் சிலர் பால் கலக்காத பிளாக் காபி என்று கூறப்படும் வர காப்பியில் துளி எலுமிச்சை சாறு கலந்து குடிப்பார்கள். இது தலைவலிக்கான நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

சிலருக்கு இது போன்ற எந்த வீட்டு வைத்தியங்களும் சரிபட்டு வராது. அப்படி இருப்பவர்கள் பக்கவிளைவுகள் இல்லாத மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பின்னர் மருந்து எடுத்துக் கொள்வது சிறந்தது.