எகிப்து தேவதை கிளியோபாட்ராவின் மரணம்.. இன்று வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு

இந்த உலகத்தில் நாம் இதுவரை பல்லாயிரக்கணக்கான அழகிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் வரலாற்றில் இன்று வரை நிலைத்து நிற்கும் பேரழகி தான் கிளியோபாட்ரா.

இவரை பற்றி கூறினாலே நம் நினைவுக்கு வருவது பாலில் குளிப்பவர், கண்களுக்கு பிரத்தேகமாக வண்ண மைகளை கொண்டு அலங்காரம் செய்பவர், தன்னுடைய அழகை பராமரிக்க பல செலவு செய்பவர் இது போன்ற விஷயங்கள் தான்.

உண்மையில் கிளியோபாட்ரா பேரழகி மட்டுமல்ல, சிறந்த புத்தி கூர்மையும் கொண்டவர். எகிப்து நாட்டின் மக்களுக்காக பல விஷயங்களை செய்த சிறந்த அரசியாகவும் இவர் பார்க்கப்பட்டார். அதனாலேயே அந்த மக்கள் இவரை ஒரு தேவதையாக கொண்டாடினார்கள்.

அந்த மக்களுக்காக எகிப்து மொழியை கற்றுக் கொண்ட ஒரே பெண்ணும் இவர்தான். அவர்களுடைய வம்சத்தில் கிரேக்க மொழியில் தான் பேசி வந்தனர். ஆனால் கிளியோபாட்ரா எகிப்து உட்பட 11 மொழிகளை கற்றுத் தெரிந்தவர். இவ்வளவு சிறப்புகளையும் புகழையும் கொண்ட இவருடைய மரணம் இன்று வரை ஒரு சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Also read: வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்கரை

இவருடைய தந்தை இறந்த பிறகு 18வது வயதில் அரசியாக பொறுப்பேற்றுக் கொண்ட கிளியோபாட்ரா தன்னைவிட 10 வயது குறைவான அவருடைய தம்பியை திருமணம் செய்து கொண்டார். வேறு வம்சத்தின் ரத்தம் கலந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நாட்டில் இது ஒரு வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்தது.

முதல் கணவர் இறந்தவுடன் கிளியோபாட்ரா தன்னுடைய அடுத்த சகோதரனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரும் சில காலங்களிலேயே இறந்து போனார். இந்த மரணமும் ஒரு சர்ச்சை தான். ஏனென்றால் அவர்கள் இருவரையும் கிளியோபாட்ரா தான் கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

அதன் பிறகு கிளியோபாட்ரா ஒரு அரசியாக எகிப்தை திறமையாக ஆட்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோருடன் காதல் இருந்தது. அதில் ஜூலியஸ் சீசர் மூலமாக ஒரு மகனையும், ஆண்டனியின் மூலமாக மூன்று குழந்தைகளையும் அவர் பெற்றெடுத்தார்.

இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த அவருடைய வாழ்வு சில எதிரிகளால் முடியும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதாவது எகிப்தை வசப்படுத்த முயற்சி செய்த சிலரின் வஞ்சத்தால் கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதாவது கிளியோபாட்ராவின் எதிரியாக இருந்த ஆக்டேவியன் என்பவர் ஆன்டனி மற்றும் கிளியோபாட்ரா இருவரையும் தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. ஆண்டனியிடம் அவர் கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறியதன் பொருட்டு ஆன்டனி தன்னைத்தானே வாளால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also read: இந்த ஐடியா நமக்கு தோனாமா போச்சே! வாழ்வை விற்று ஜாலியாக கல்லா கட்டும் நபர்!

இதை கேள்விப்பட்ட கிளியோபாட்ரா ஆண்டனி இல்லாத உலகில் வாழ விரும்பாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு செய்திகள் உண்டு. ஆனாலும் அவருடைய மரணம் இன்றும் ஒரு மர்மமானதாகவே இருக்கிறது. ஏனென்றால் அவர் பாம்பை தன் உடலில் பரவ விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மரணமடைந்ததாகவும், கூரிய விஷமுள்ள ஒரு ஆயுதத்தால் தன்னை கிழித்துக் கொண்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் இதைப்பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தும் கூட கிளியோபாட்ராவின் மரணத்தின் உண்மை நிலை என்ன என்பது இதுவரை மர்மமாக இருக்கிறது கிளியோபாட்ராவின் மரணத்திற்கு பிறகு அவருடைய மகனை எதிரிகள் தூக்கிலிட்டு கொன்றனர்.

கிளியோபாட்ராவின் மரணம் ரோமானிய பேரரசின் தொடக்கத்திற்கும் வழி வகுத்தது அதன் பிறகு எகிப்து, ரோமானிய பேரரசின் மாகாணமாக மாறியது குறிப்பிடத்தக்கது.