நேரத்தை மிச்சப்படுத்தும் ஈஸியான வீட்டு குறிப்புகள்.. இல்லத்தரசிகளுக்கான அருமையான டிப்ஸ்

நாம் என்னதான் ஒரு வேலையை பார்த்து பார்த்து செய்தாலும் சில சமயங்களில் அந்த வேலை நமக்கு பல வேலையை வைத்து விடும். உதாரணத்திற்கு நம் வீட்டு கிச்சனையை எடுத்துக் கொள்வோம். நாம் என்னதான் அதை நன்றாக சுத்தமாக வைத்திருந்தாலும், கிச்சன் சிங்க் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் தீராத தலைவலியாகவே இருக்கிறது.

கஷ்டப்பட்டு எவ்வளவு தான் தேய்த்து கழுவினாலும் அதில் படிந்திருக்கும் உப்பு கரைகள் விடாப்படியாக இருந்து நம்மை டென்ஷன் படுத்தும். இதுபோன்ற இன்னும் எத்தனையோ விஷயங்களை அவர்கள் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் எளிமையான, நேரத்தை மிச்சப்படுத்தும் வீட்டு குறிப்புகள் சிலவற்றை இங்கு காண்போம்.

இப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் எந்த பொருட்கள் வாங்கினாலும் அதை ரொம்பவும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அந்த பட்சத்தில் காய்கறி மற்றும் பழங்களை நாம் சிறிதளவு வினிகர் கலந்த நீரில் சில நிமிடங்கள் போட்டு வைத்தால் அதில் இருக்கும் கிருமிகள் இறந்து விடும்.

பூண்டு, வெங்காயம் போன்றவற்றை நறுக்கும் போது கத்தி மற்றும் கைகளில் துர்நாற்றம் ஏற்படும். அதை போக்குவதற்கு உப்பை சிறிதளவு கை மற்றும் கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவினால் துர்நாற்றம் நீங்கும்.

சின்ன வெங்காயம் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் உணவில் சுவையை அதிகரிக்கவும் கூடியது. ஆனால் இந்த சின்ன வெங்காயத்தை உரிப்பது பெரும் பாடாக இருக்கும். அதனால் சின்ன வெங்காயத்தை சமைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தண்ணீரில் போட்டு ஊறவைத்து பிறகு உரித்தால் தோல் ஈஸியாக வந்துவிடும்.

நம் வீடுகளில் கோதுமை மாவை கிலோ கணக்கில் வாங்கி அரைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது வழக்கம். அப்படி இருக்கும்போது அதில் வண்டு, பூச்சி போன்றவை வரும். அதனால் கோதுமை மாவு உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதிலும் முக்கியமாக வெந்தயக்கீரை ஈரமாக இருக்கக் கூடாது.

வீட்டு ஜன்னல்களில் கரும்பு பச்சை அல்லது கருநீலத்தினால் ஆன ஸ்கிரீன் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராமல் தடுக்க முடியும். அதேபோன்று நாம் சமைக்கும் எந்த உணவாக இருந்தாலும் அதை மூடி வைத்து சமைக்க வேண்டும். இதன் மூலம் கேஸ் அதிகமாக செலவாகாது. ஆனால் கீரையை மூடி வைத்து சமைக்க கூடாது.

நம் வீட்டு தரையை துடைப்பதற்கு கடைகளில் விற்கும் லிக்விட் போன்றவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நம் வீட்டு தரை அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து துடைத்தாலே போதும் கிருமிகளும், அழுக்கும் மறைந்துவிடும்.

துணிகளில் எண்ணெய் கறை அல்லது கிரீஸ் கறை போன்ற ஏதாவது விடாப்படியான அழுக்கு பட்டுவிட்டால் அதை துவைப்பதற்குள் நமக்கு ஒரே போராட்டமாக இருக்கும். அந்த சமயத்தில் நாம் அந்த கறையின் மீது சில சொட்டுக்கள் நீலகிரி தைலம் விட்டு கழுவினால் அந்த கறைகள் மறைந்துவிடும்.

சில சமயங்களில் வெள்ளி பாத்திரங்கள் கருப்பாக மாறிவிடும். அதனால் வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்களில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைப்பதன் மூலம் அது கருப்பாகாமல் தடுக்கலாம்.

மேற்கூறிய இந்த சில குறிப்புகளை இல்லத்தரசிகள் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு நேரமும் மிச்சமாகும், டென்ஷனும் குறையும்.