சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும்.

வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர்.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

இதை சாப்பிடுவதனால் ஏற்படும் பலன்கள். அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும். பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும். மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும். குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.

நெல்லிக்காய் அளவு வீதம், 21 நாட்கள் சாப்பிட வாய்வு, விரை வீக்கம் தீரும். வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்து மைபோல அரைத்து, காலை, மாலை சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும். வல்லாரை இலைத் தூளுடன் சோம்புத் தூள் (சிட்டிகை அளவு) எடுத்து கலந்து தின்று வெந்நீர் குடித்து வர உஷ்ண வயிற்று வலி தீரும்.

நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித்தொல்லை, சிறுநீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துவதிலும் வல்லாரை சிறந்த மூலிகையாக உள்ளது. 10 கிராம் வல்லாரைப் பொடியுடன், 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்கப் போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.